பண்டாரகமவில் 19 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!!

 பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெந்தேசிவத்த, மஸ்வில பகுதியில் சுமார் 19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 18 கிலோகிராம் 672 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.