களத்தடுப்பில் ஈடுபட்ட சந்திமால் உபாதை – வைத்தியசாலையில் அனுமதி!!

காலி மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று (18), இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது உபாதைக்கு உள்ளானார்.

எல்லைக்கோட்டிற்கு அருகில் நான்கோட்டத்தைத் தடுக்க முயன்றபோது, அவரது வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற உடனேயே, மைதானத்தில் அணியின் உடலியக்க நிபுணர் சந்திமாலை பரிசோதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஸ்கேன் பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே, அவரது உபாதையின் தன்மை மற்றும் தீவிரம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என சிறிலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.