கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளின் செயல்திறன் இந்த வளர்ச்சிக்கு முக்கிய ஆதரவாக அமையும் எனவும், ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட நாணயக் கொள்கை அறிக்கையில் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக இருப்பதால், குறுகிய கால பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெரும்பாலும் சாதகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்நாட்டுத் தேவை படிப்படியாக அதிகரித்து வருவதுடன், தொடர்ச்சியான பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையும் காணப்படுவதால், மத்திய காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதன் சாத்தியமான திறனை நோக்கி படிப்படியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கை இறுக்கத்தின் தாக்கம் காரணமாக உள்நாட்டுத் தேவையின் வளர்ச்சி ஓரளவு மந்தமாக இருக்கக்கூடும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, புவிசார் அரசியல் மாற்றங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் காலநிலை அபாயங்கள் காரணமாக மத்திய கால பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகள் அதிக நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடையும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தைகள், வர்த்தகப் பாய்வுகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும். இதன் தாக்கம் இலங்கையின் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கக்கூடும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
மேலும், உலகளாவிய வர்த்தகம் மற்றும் கொள்கை சார்ந்த நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளின் பொருளாதார செயல்திறனும் நாட்டின் எதிர்கால வளர்ச்சிப் பாதையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், மீண்டும் மீண்டும் ஏற்படும் பாதகமான வானிலை நிலைமைகள் மத்திய மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையக்கூடும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
எனவே, நிலையான மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தழுவிக்கொள்ளக்கூடிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து பேணுவதற்கு இலக்கு வைக்கப்பட்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூலோபாயங்களையும் உரிய காலத்தில் திறம்பட நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
.jpeg)