சிறுவர் துன்புறுத்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் – வெளியாகிய தகவல்.




சிறுவர்களை கைவிடுதல் மற்றும் அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மாதமொன்றுக்கு சுமார் 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக அதன் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை கைவிடுதல், அவர்களை உடல் மற்றும் உளவியல் ரீதியாக துன்புறுத்துதல் போன்ற குற்றச்செயல்களில் பெற்றோர் அல்லது பொறுப்பானவர்கள் ஈடுபடுவது தொடர்பில் அதிகார சபைக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என சட்டத்தரணி சஜீவனி அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்குவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.