கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? ரொனால்டோவின் பரபரப்பு பேட்டி!!

 


போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது நீண்டகால காதலியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்ட பின்னர் அளித்த பேட்டியில், 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக, விளையாட்டு உலகில் ஒரு மகத்தான மரபை விட்டுச்செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்திய 2026 FIFA உலகக் கிண்ணத் தொடரில் தனது ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற பின்னர், தனது எதிர்காலம் குறித்து முக்கிய முடிவை எடுக்கத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது அதிக நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடவும், உலகம் முழுவதும் பயணம் செய்யவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு மிகவும் பிடித்தமான ‘பேடல்’ விளையாட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவின் இந்த கருத்துகள், அவரது மிகச்சிறப்பான கால்பந்து பயணத்தின் முடிவு நெருங்கிவிட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.