ஜூலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற இலங்கையர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்!!

 

 இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக புறப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஜூலை மாதத்தில் வெளிநாடு சென்றோரின் எண்ணிக்கை 4.84 சதவீதம் உயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் பல்வேறு நாடுகளுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்று புறப்பட்டுள்ளனர். இது, 2026 ஆம் ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெளிநாட்டு வேலைவாய்ப்பு எண்ணிக்கையாக அமைந்துள்ளது. இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் 24,440 பேர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர்.

இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் காரணமாக, அந்த நாடுகளுக்கான வேலைவாய்ப்புகளில் இலங்கையர்களின் ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு 2,521 பேரும், தென் கொரியாவுக்கு 1,618 பேரும், ஜப்பானுக்கு 79 பேரும் தொழில் நிமித்தமாக புறப்பட்டுள்ளனர்.

மேலும், ஜப்பானின் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற 14 இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (03) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் விமானப் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, 2026 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிற்கு 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை அனுப்பியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன