ஹோமாகம, பிடிபன, கலகாஹேன பகுதியில் வாடகை முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 16ஆம் திகதி வாடகை மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சாரதியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பின்னர் சாரதியின் சடலம் கால்வாய் ஒன்றில் வீசப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதத்துடன் சந்தேகநபர் மின்னேரியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொலைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபரின் மகனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துக்குப் பின்னர் உயிரிழந்த சாரதியின் மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் மற்றும் ஜாக்கெட் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஹோமாகம நகரிலுள்ள உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படும் CCTV காட்சிகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
