மட்டக்களப்பு கொலை வழக்கு: பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

 


முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (18) பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும், கல்லடி பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பாக அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.