ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’ படத்தின் டிரைலர் 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
ரமேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும், யஷ் இராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடிக்கிறார்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், 2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை 30ஆம் திகதி அதிகாலை 4.15 மணிக்கு வெளியான 4.09 நிமிடங்கள் கொண்ட டிரைலர், ஆரம்பம் முதல் இறுதி வரை பிரம்மாண்டமான காட்சிகளுடன் அமைந்துள்ளது.
ராவணனின் அறிமுகத்துடன் தொடங்கும் இந்த டிரைலரில், ராமரின் குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள், சீதையுடனான திருமணம், 14 ஆண்டுகள் வனவாசம், சீதையின் கடத்தல் உள்ளிட்ட முக்கியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ், பின்னணி இசை மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்பு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘ராமாயணா’ படத்தின் டிரைலர் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் மொத்தமாக 100 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், யூடியூபில் வெளியான ஹிந்தி டிரைலர் மட்டும் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்பட டிரைலர்களில் ஒன்றாக ‘ராமாயணா’ புதிய சாதனை படைத்துள்ளது.
.jpeg)