ஒரு கோடியே 41 இலட்சம் ரூபா தங்க நகை கொள்ளை: சந்தேகநபர்கள் கைது!!

கல்கிசை பகுதியில் இடம்பெற்ற வீடு உடைப்பு மற்றும் தங்க நகை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 18ஆம் திகதி வீடொன்றை உடைத்து 14,100,000 ரூபா (ஒரு கோடியே 41 இலட்சம் ரூபா) பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கல்கிசை குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று (06) தெஹிவளை பகுதியில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதுடன், குறித்த குற்றத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் ஹட்டன் பத்தன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதின் போது, கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் 8 ஜோடி தங்க தோடுகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு தங்க வளையல், 10 தங்க சங்கிலிகள், ஒரு கைக்காப்பு மற்றும் 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 28, 46 மற்றும் 53 வயதுடைய மூன்று பெண்களும், ஹட்டன் பத்தன பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.