மெகசின் சிறைச்சாலை பதற்றம்: 11 கைதிகள் வைத்தியசாலையில், ஒருவர் பலி!!

 


கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலைக்கு வெளியிலிருந்து பொதியொன்று வீசப்பட்டதாகவும், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் குழுவொன்று அமைதியின்மையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, இன்று (08) கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.