மறைத்து வைத்த ரூ.5 லட்சம்... கரையானுக்கு இரையான பணம்: கண்ணீரில் விவசாயி!!

 இராஜஸ்தானில் மனைவிக்கு தெரியாமல் விவசாய நிலத்தில் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால், விவசாயி ஒருவர் கண்ணீர்விட்டு அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டம் பச்பத்ரா பகுதியைச் சேர்ந்த மங்கிலால் மேக்வால் என்ற விவசாயியே இவ்வாறு பணத்தை இழந்துள்ளார்.

மங்கிலால் கடந்த ஆண்டு தனது நிலத்தை ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பணத்தை பயன்படுத்தி விவசாய நிலத்தில் அறை ஒன்றை கட்டுவதற்கு அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், அந்தப் பணத்தை மனைவிக்கு தெரியாமல் பாலிதீன் கவரில் போட்டு, விவசாய நிலத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார். பின்னர், மது அருந்தும் பழக்கம் காரணமாக பணத்தை புதைத்து வைத்த இடத்தை அவர் மறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அறை கட்டுவதற்காக பணம் தேவைப்பட்டபோது, புதைத்து வைத்த பணத்தை தேடத் தொடங்கியுள்ளார். சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள தனது விவசாய நிலத்தில் நீண்ட நாட்களாக தேடியும் பணம் கிடைக்கவில்லை.

இதையடுத்து, நடந்த சம்பவத்தை மனைவி மற்றும் மகனிடம் மங்கிலால் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அவர்கள் இதனை நம்பவில்லை என்றாலும், பின்னர் அவருடன் இணைந்து பணத்தைத் தேடியுள்ளனர்.

இவ்வாறு பணத்தைத் தேடியும் பலனளிக்காமல் ஓராண்டு கடந்துள்ளது. இந்நிலையில், மழைக்குப் பின்னர் விவசாய நிலத்தை சாகுபடிக்கு தயார்படுத்துவதற்காக டிராக்டர் மூலம் நிலத்தை உழுதுள்ளனர்.

அப்போது, மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ரூ.5 லட்சம் பெறுமதியான 500 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை கரையானால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டிருந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை பச்பத்ராவில் உள்ள வங்கிக்கு எடுத்துச் சென்று மாற்றித் தருமாறு கோரியுள்ளனர். எனினும், அங்குள்ள வங்கி நிர்வாகம் அந்த நோட்டுகளை மாற்ற மறுத்ததுடன், ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கரையான் அரித்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்து மங்கிலால் கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.