மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவ, மாணவிகள், துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று (20) பல்வேறு வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் கள ஆய்வை மேற்கொண்டனர்.
இதன்போது மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகேயுள்ள சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
உழக்குடி அருகே அமைந்துள்ள பழமையான நெடுங்கல்லை பார்வையிட்ட மாணவர்கள், அதன் தொன்மை மற்றும் பிரமாண்டமான உயரத்தை கண்டு வியந்தனர்.
இதன்போது நெடுங்கல்லுக்கு அருகில் மாணவர் லட்சுமணன் என்பவர் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். அதில் அந்துப்பூச்சியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதே பகுதியில் மாணவி பிரியா என்பவர் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்த மண்பாண்டத்தின் பானைமூடியின் உடைந்த பகுதியையும் கண்டெடுத்தார்.
இந்த இரண்டு தொல்லியல் பொருட்களும் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்தார்.
இந்தக் கள ஆய்வில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டியுள்ளார்.
.jpeg)