காந்தியின் அரிய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் கோடிகளில் ஏலம்.



 மகாத்மா காந்தி தனது நெருங்கிய நண்பரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிகோரணிக்கு எழுதிய 688 அரிய கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு 16.20 கோடி ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணம் ஒன்று ஏலத்தில் விற்பனையானதில் இதுவே உலக சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை, அகிம்சை, சேவை, பிரம்மச்சரியம் மற்றும் ஒழுக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் காந்தியடிகள் எழுதிய தினசரி குறிப்புகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஹிகோரணியின் மனைவி வித்யா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளாக காந்தியடிகள் வழங்கிய தினசரி வழிகாட்டுதல்கள் மற்றும் சிந்தனைகள் இந்தக் கையெழுத்துப் பிரதிகளில் அடங்கியுள்ளன. பின்னர் இவை “A Thought for the Day” என்ற நூலாகத் தொகுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காந்தி: ஆனந்த் டி. ஹிகோரணி சேகரிப்பு” என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஏலத்தில், காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 86 லாட்டுகள் இடம்பெற்றிருந்தன.

மகாத்மா காந்தியின் பொதுவாழ்க்கை மட்டுமன்றி, அவரது தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் மனிதநேயப் பண்புகளையும் வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்று ஆவணங்களாக இவை கருதப்படுவதாக ஏல நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.