ஒகஸ்ட் 28இல் அரிய பகுதி சந்திர கிரகணம்!1

 


எதிர்வரும் ஒகஸ்ட் 28ஆம் திகதி அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திர கிரகணத்தின் போது நிலவின் சுமார் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படவுள்ளதால், இது முழு சந்திர கிரகணத்தைப் போன்றே காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அரிய வானியல் நிகழ்வை இலங்கையில் இருந்து காண முடியாது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் ஊடாகச் சென்று சந்திரனை அடைவதால், நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கக்கூடும். இதன் காரணமாகவே முழு சந்திர கிரகணத்தின் போது காணப்படும் சிவப்பு நிற நிலவு பொதுவாக ‘ரத்த நிலவு’ (Blood Moon) என அழைக்கப்படுகிறது.

சாதாரண பகுதி சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மறைக்கப்படும். ஆனால், எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கிரகணத்தின் போது நிலவின் 96 சதவீத பகுதி மறைக்கப்பட்டு, சுமார் 4 சதவீத பகுதி மட்டுமே வெளிச்சமாகத் தோன்றும்.

இதனால், இது தொழில்நுட்ப ரீதியாக பகுதியளவு சந்திர கிரகணமாக இருந்தாலும், நிலவு கிட்டத்தட்ட முழுமையாக மறைக்கப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இந்த நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த சந்திர கிரகணம் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாகக் காணும் வாய்ப்புள்ளதாகவும் வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் கிரகணத்தின் ஒரு பகுதியை மட்டுமே காண முடியும்.

எனினும், இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடலைச் சூழ்ந்துள்ள சில பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை காண முடியாது.

இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28ஆம் திகதி காலை 8.04 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து, முற்பகல் 9.43 மணியளவில் உச்சத்தை அடைந்து, காலை 11.22 மணியளவில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த அரிய சந்திர கிரகணத்தை இலங்கையில் இருந்து நேரடியாகப் பார்வையிட முடியாது.