இரவு நேரத்தில் தூங்கும் போது அதிகாலை 3 மணியளவில் திடீரென விழித்துக்கொள்வது பலருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வாக இருக்கலாம் என உளவியலாளர் மெஹெசபின் டோர்டி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் அதிகாலை 3 மணிக்கு விழிப்பது குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், அவற்றை நம்பி மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையைச் சேர்ந்த உளவியலாளர் மெஹெசபின் டோர்டி, தூக்கத்தின் போது இரவில் சிறிது நேரம் கண்விழிப்பது முற்றிலும் இயல்பானது என்றும், பெரும்பாலானவர்கள் மறுநாள் அந்த விழிப்பை நினைவில் வைத்திருப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒருவர் ஒவ்வொரு இரவும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் விழித்து, மீண்டும் தூங்குவதற்கு சிரமப்படுவாராயின், அவர்களின் தூக்கத்தை ஏதோ ஒன்று பாதித்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம்
மன அழுத்தம் இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். உடலின் மன அழுத்த ஹார்மோன் எனப்படும் கார்டிசோல், அதிகாலை நேரங்களில் இயற்கையாகவே அதிகரிக்கத் தொடங்குகிறது. இது உடலை விழித்தெழுவதற்குத் தயார்படுத்தும் இயற்கையான செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
ஆனால் நீண்டகால மன அழுத்தம், பதட்டம், உணர்ச்சி ரீதியான சிரமங்கள் அல்லது அதிகப்படியான சோர்வு போன்றவை இருந்தால், இந்த அமைப்பு அதிக உணர்திறன் கொண்டதாக மாறக்கூடும்.
இதன் காரணமாக இரவு நேரத்திலேயே உடல் அதிக விழிப்புடன் இருந்து, எளிதில் கண்விழிப்பதற்கும் மீண்டும் தூங்குவதில் சிரமம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக உளவியலாளர் தெரிவித்துள்ளார்.
3 மணிக்கு விழிப்பதற்கு கார்டிசோல் மட்டுமே காரணமல்ல
அதிகாலை 3 மணிக்கு ஏற்படும் ஒவ்வொரு விழிப்புக்கும் கார்டிசோல்தான் காரணம் எனக் கருதக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பதட்டம், மனச்சோர்வு, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல், நாள்பட்ட வலி, நெஞ்செரிச்சல், ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும்.
மேலும், சில மருந்துகள், பிற்பகுதியில் காஃபி அருந்துவது, படுக்கைக்குச் செல்லும் முன் நீண்ட நேரம் செல்போன் அல்லது தொலைக்காட்சி பார்ப்பது, மாலையில் மது அருந்துவது மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறாமல் இருப்பது போன்ற அன்றாட பழக்கங்களும் இரவில் விழித்துக்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
விழித்தவுடன் கவலை அதிகரிப்பது ஏன்?
பலருக்கு பிரச்சினையாக இருப்பது அதிகாலை நேரத்தில் விழித்துக்கொள்வது மட்டுமல்ல; விழித்த பின்னர் எண்ணங்கள் வேகமாக ஓடத் தொடங்குவதும் ஆகும்.
பகல் நேரத்தில் எளிதாக சமாளிக்கக்கூடியதாகத் தோன்றும் வேலை, உறவுகள், நிதிநிலை அல்லது உடல்நலம் தொடர்பான சிறிய கவலைகள்கூட இரவு நேரத்தில் மிகப்பெரிய பிரச்சினையாகத் தோன்றலாம்.
இரவு நேரத்தில் கவனச்சிதறல்கள் குறைவாக இருப்பதாலும், ஒருவர் தனது எண்ணங்களுடன் தனியாக இருப்பதாலும் கவலைகள் மிகவும் தீவிரமாக உணரப்படலாம்.
எனவே, அதிகாலை 3 மணிக்கு விழித்தால், அந்த நேரத்தைப் பற்றியே கவலைப்படுவதற்குப் பதிலாக, விழித்தபோது உடலிலும் மனதிலும் என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம் என உளவியலாளர் தெரிவித்துள்ளார்.
வேலை தொடர்பான சிந்தனைகள் அதிகமாக உள்ளனவா, பதட்டமாக உணர்கிறீர்களா, உடலில் வலி அல்லது அசௌகரியம் உள்ளதா, அதிக வெப்பமாக உணர்கிறீர்களா, மூச்சுத்திணறல் அல்லது திடீர் உடல் வெப்பம் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அதிகாலை 3 மணிக்கு விழிப்பது உடல் ஏதேனும் மர்மமான செய்தியை வழங்குகிறது என்பதற்கான அறிகுறி அல்ல. மாறாக, மன அழுத்தம், வாழ்க்கை முறைப் பழக்கங்கள் அல்லது ஏதேனும் உடல்நலப் பிரச்சினை தூக்கத்தைப் பாதிக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
இந்த நிலை பல வாரங்களாகத் தொடர்ந்து நீடித்தாலோ, பகல் நேரச் செயல்பாடுகளைப் பாதித்தாலோ அல்லது அதிக சோர்வை ஏற்படுத்தினாலோ, இணையத்தில் பரவும் கருத்துகளை நம்புவதற்குப் பதிலாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது என உளவியலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
