சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவின் தண்டனையைக் குறைக்கக் கோரி, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேன்முறையீடு சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள சட்ட நிறுவனமொன்றின் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார்.
இந்த மேன்முறையீடு எதிர்வரும் காலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மாற்றியமைத்து, நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் அடங்கிய விசேட சட்டக் குழு இன்று இலங்கைக்குத் திரும்பவுள்ளது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை (06) சவூதி அரேபியாவுக்குப் பயணித்திருந்தனர்.
இதேவேளை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட், இம்மாதம் 8ஆம் திகதி தம்மாம் மத்திய சிறைச்சாலைக்குச் சென்று அனோஜன் சிவராசாவின் நலநிலை தொடர்பில் விசாரித்துள்ளார்.
இதன்போது, அனோஜன் சிவராசா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தம்மாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை மருத்துவர் ஆகியோரையும் இலங்கைத் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்று தொடர்பாக, சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால் அனோஜன் சிவராசாவுக்கு ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், சிவராசா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னைய தீர்ப்பை மாற்றியமைத்து மரண தண்டனை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா, தொழில் நிமித்தம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.