மீலாதுன் நபி தினத்தில் முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி அநுர குமார வாழ்த்து.

 


இஸ்லாமிய நாட்காட்டியின் ரபீஉல் அவ்வல் மாதத்தில் கொண்டாடப்படும் புனித மீலாதுன் நபி தினம் இன்று (26) உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களால் பக்தியுடனும் மரியாதையுடனும் அனுஷ்டிக்கப்படுகிறது.

இறுதித் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் இந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

சமத்துவமான, நீதிமிக்க மற்றும் மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்குவதே மீலாதுன் நபி தினத்தின் முக்கிய செய்தியாகும் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த தினம் வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், ஆழமான ஆன்மீக மற்றும் சமூகப் பெறுமதிகளை நினைவுகூரும் ஒரு நாளாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி மனிதகுலத்தை வழிநடத்திய முஹம்மது நபி (ஸல்) அவர்கள், எல்லையற்ற பொறுமை, கருணை மற்றும் மனிதநேயத்தின் வழியை உலகிற்கு எடுத்துக்காட்டிய சிறந்த இறைத்தூதர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமது வாழ்நாளில் பல்வேறு சவால்கள் மற்றும் இன்னல்களை எதிர்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 23 ஆண்டுகால இறைத்தூதுப் பணியின் மூலம் அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலைநிறைந்த ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனம், சாதி, நிறம் மற்றும் குலம் போன்ற அடிப்படைகளில் மனிதர்களை வேறுபடுத்துவதை நிராகரித்த முஹம்மது நபி (ஸல்), மனிதகுலம் அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியதாக போதித்தார். உண்மைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற உயர்ந்த மனிதப் பண்புகளே ஒருவரின் உண்மையான மேன்மையை தீர்மானிக்கின்றன என்பதையும் அவர் உலகிற்கு உணர்த்தினார்.

மேலும், சமூகத்தில் காணப்படும் பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) முக்கியத்துவம் அளித்தார். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தையும் அவர் அமைத்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சி நிலவும், நீதிமிக்க மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டையும், சகவாழ்வு மற்றும் சகோதரத்துவம் நிறைந்த சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகள் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களின் உளத் தூய்மையையும் சமூகத்தின் நன்னடத்தையையும் சீர்குலைக்கும் அனைத்து தீமைகளையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. அந்த வகையில், நாட்டில் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேசிய நடவடிக்கைகள் மற்றும் சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு இஸ்லாமிய போதனைகளும் நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரியும் பெரும் வழிகாட்டுதலாக அமையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உடைந்த உள்ளங்களை குணப்படுத்தி, வெறுப்பிற்குப் பதிலாக அன்பையும், பிணக்குகளுக்குப் பதிலாக சகோதரத்துவத்தையும் உருவாக்கும் புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தியாகம் மற்றும் மனிதநேயப் போதனைகள் ஒளிவிளக்காக அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் உயர்ந்த மனிதநேயப் பண்புகளை நமது அன்றாட வாழ்வில் பின்பற்றி, சிறந்த சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது மனமார்ந்த மற்றும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.