கடற்படையின் விரைவு நடவடிக்கை: அனர்த்தத்திலிருந்து 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!!

 


சீரற்ற வானிலை காரணமாக நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் பயணித்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நேற்று இரவு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவைப் படகு கடல் கொந்தளிப்பால் கட்டுப்பாட்டை இழந்து அனர்த்தத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் படகில் இருந்த 11 இந்திய மீனவர்களும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியிருந்தனர்.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் இலங்கை கடற்படையினர் அவசர மீட்புப் பணியை ஆரம்பித்தனர். நீண்ட நேர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் பின்னர், இன்று அனைத்து 11 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கிய இந்திய இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.