அமெரிக்கா–கனடா வர்த்தகப் போர் தீவிரம்: கனடா அதிரடி பதில் வரி அறிவிப்பு.



 அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா அறிவித்துள்ளது.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட புதிய தீர்வை வரிகளுக்கு சமமான மதிப்பில் இந்த பதில் வரிகள் விதிக்கப்படவுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனுடன், வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் பல்வேறு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் புதிய பதில் வரிகள் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன. இதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 700 வகையான பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% வரிகள் விதிக்கப்படவுள்ளன.

குறிப்பாக, எஃகு, அலுமினியம், தளவாடங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட சில முக்கிய பொருட்களுக்கு 50% வரியும், பாலாடைக்கட்டி, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சில கடல் உணவுப் பொருட்களுக்கு 25% வரியும் விதிக்கப்படவுள்ளது.

அதேவேளை, மின்னணு பொருட்கள் மற்றும் சில கருவிகளுக்கு 15% வரி விதிக்கப்படவுள்ளதாக கனடிய அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு உதவும் வகையில் 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான நிதியுதவித் திட்டத்தையும் கனடா அறிவித்துள்ளது.

நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கு ஆதரவளித்தல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுதல் மற்றும் புதிய வரிகளால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே வரிகளைத் தவிர்ப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த புதிய 50% வரிகள் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கனடா தற்போது அறிவித்துள்ள பதில் வரிகள், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகின்றன.

“டொலருக்கு டொலர், வீதத்திற்கு வீதம்” என்ற அடிப்படையில் விதிக்கப்படும் பதில் வரிகளும், பல பில்லியன் டொலர் மதிப்பிலான உதவித் திட்டமும் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் என கனடாவின் நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புதிய வரிகள் கனடிய நுகர்வோர் மற்றும் வணிகங்கள் மீதான தாக்கத்தை குறைவாக வைத்திருக்கும் வகையிலும், அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கனடிய அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.