பதுளையில் விசேட வைத்தியர் மாயம்!!




 பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வரை வைத்தியசாலையில் தனது கடமைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, வைத்தியரின் கார் மஹியங்கனை நோக்கிப் பயணித்துள்ளமை மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்தியரின் கார் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காணாமல் போன வைத்தியரைத் தேடும் நடவடிக்கைகள் இன்று (24) தீவிரப்படுத்தப்படவுள்ளன. பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.