பிற்பகலில் இடியுடன் மழை – பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

 



மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேவேளை, அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதற்கும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.