அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை.

 


அத்துருகிரிய – ஹபரகட, முல்லேகம பகுதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இரு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதலே காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ஹபரகட கசூன்’ என்பவரின் உறவினர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் 29 வயதான வர்த்தகர் ஒருவர் காயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது சுமார் மூன்று துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சம்பவ இடத்திலிருந்த அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.