பேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 4,250 தொன் சீனி தொகையுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த சீனி தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000 சீனி மூட்டைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவெல, அங்கொட, பிலியந்தலை மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சீனி தொகை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
