இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் தொடரை கைப்பற்றியது.
2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் தொடரொன்றை வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தொடரின் முதல் போட்டியில் பெற்ற இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்கள் வித்தியாசமான அபார வெற்றியே, அவர்களின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 60 ஓவர்களில் 302 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், வெற்றிக்காக அதிக ஆபத்தை எதிர்கொள்ளாமல் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆட்டமிழக்காத ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜோன் கேம்ப்பெல் மற்றும் பிரண்டன் கிங் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 109 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது.
இருவரும் தலா 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற முதல் இன்னிங்ஸில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 549 ஓட்டங்களை குவித்தது. இதில் லஹிரு உதார 188 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கு பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 499 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணிக்காக ஜஸ்டின் கிரீவ்ஸ் 180 ஓட்டங்களையும், ஷாய் ஹோப் 112 ஓட்டங்களையும் பெற்று அணியின் முன்னிலைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயகன் ஆகிய இரு விருதுகளையும் ஜஸ்டின் கிரீவ்ஸ் வென்றார்.
.jpeg)