கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், சென்சார் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்டபடி திரையரங்குகளை சென்றடையவில்லை. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்றதால் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போனது. பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டாலும், 2026 தேர்தல் நெருங்கியதால் அரசியல் சார்ந்த திரைப்படங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என கூறப்பட்ட நிலையில், படம் தேர்தலுக்குப் பின்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், திரைப்படத்தை பார்வையிட்ட மறுசீராய்வு குழு ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சென்சார் தரப்பில் இருந்து படத்தில் 13 மாற்றங்கள் அல்லது காட்சிகள் நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் சென்சார் தொடர்பான இறுதி தகவல்கள் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.