2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்து அணி முன்னேறியுள்ளது. வான்கூவரில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கொலம்பியாவை பெனால்டி முறையில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து, அடுத்த சுற்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான நிர்ணய நேர ஆட்டம் கோல்கள் இன்றி சமநிலையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
பெனால்டி வாய்ப்புகளில் கொலம்பிய அணியின் டேவின்சன் சான்செஸ் மற்றும் குச்சோ ஹெர்னாண்டஸ் ஆகியோரின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து அணியின் ரூபன் வர்காஸ் தனது வாய்ப்பை வெற்றிகரமாக கோலாக மாற்றி அணியின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் 70 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதிக்குப் பின்னர் சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டிக்கு முன்னதாக சுவிஸ் அணியின் முக்கிய வீரரான ஜோஹான் மன்சாம்பி முழங்கால் காயம் காரணமாக விலகியது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இதன் தாக்கம் முதல் பாதியில் காணப்பட்டதுடன், கொலம்பியா அதிக நேரம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
எனினும், கொலம்பிய அணியால் தெளிவான கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. குஸ்தாவோ புவெர்ட்டா தொலைதூரத்தில் இருந்து மேற்கொண்ட முயற்சியை சுவிட்சர்லாந்து கோல்காப்பாளர் கிரிகோர் கோபெல் சிறப்பாக தடுத்தார்.
இரண்டாவது பாதியிலும் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன. கொலம்பியாவின் லூயிஸ் சுவாரஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபேபியன் ரீடர் ஆகியோரின் முயற்சிகள் முக்கியமான தருணங்களாக அமைந்தன.
கூடுதல் நேரத்தில் கொலம்பியாவின் ஜோன் லுகுமியின் தலைப்பந்து முயற்சி கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. அதேவேளை, சுவிஸ் அணியின் ஜெகி அம்தூனியின் கோல் முயற்சியையும் கொலம்பிய கோல்காப்பாளர் காமிலோ வர்காஸ் தடுத்தார்.
இறுதியில் பெனால்டி முறையில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்து, 2026 உலகக் கிண்ணத்தில் தனது வரலாற்றுச் சாதனையை பதிவு செய்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.
.jpeg)