இலங்கையில் புதிய சிறைச்சாலை: மஹமோதர சிறைச்சாலைக்கு அமைச்சரின் அனுமதி.

 


காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் (54 ஆம் அத்தியாயம்) 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் படி, புதிய சிறைச்சாலை “மஹமோதர சிறைச்சாலை” என்ற பெயரில் நிறுவப்படவுள்ளது. இதன் அதிகாரப் பிரதேசம் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது பயன்பாட்டில் இல்லாத மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் தற்காலிக அடிப்படையில் இந்த சிறைச்சாலையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.