சிறைச்சாலை மோதலின் பின்னர் மற்றுமொரு உயிரிழப்பு!!



 நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமையைத் தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கைதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (08) காலை 7.30 மணிக்கு விசேட கலந்துரையாடலொன்றுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, குறித்த மோதல் தொடர்பிலும், எதிர்காலத்தில் ஏனைய சிறைச்சாலைகளில் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,033 கைதிகள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மோதலை வழிநடத்தியதாக கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் என்பவரும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 7 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த சுமார் 100 பேரில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சில கைதிகள் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.