பதவிய, அனுராதபுரம், பொத்துவில் மற்றும் வெலிகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
போகஸ்ஹந்திய - புல்மோட்டை வீதியின் 2ஆம் கட்டை தூண் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போகஸ்ஹந்திய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்து பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கல்லடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் - ரம்பேவ வீதியின் கல்வல சந்திக்கு அருகில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வலதுபுறமாக திரும்ப முற்பட்ட போது, எதிரே வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பின்னால் பயணித்த நபர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்த 44 வயதுடைய சாலியபுர பகுதியைச் சேர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வேன் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று நோக்கி பயணித்த வேன், எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இரண்டு வாகனங்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் காயமடைந்த வேன் ஓட்டுநர் கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்யா ஹெட்டிகே மாவத்தையில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பழைய காலி வீதியிலிருந்து பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து சுவருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஓட்டுநரும், பின்னால் பயணித்த மற்றொரு நபரும் வலன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், பின்னால் பயணித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
.jpeg)