இலஞ்ச குற்றத்தில் தண்டனை பெற்ற முன்னாள் தவிசாளர் நீதிமன்றத்தில் ஆஜர்.

 


இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாக இருந்த பாதஹேவாஹெட்ட முன்னாள் பிரதேச சபை தவிசாளர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலஞ்ச வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அவருக்கு முன்னதாக நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

இதையடுத்து, அவர் வசித்து வந்த கண்டி, மாரஸ்ஸன பகுதியை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், நேற்று (09) கிரில்லவல, இம்புல்கொட பகுதியில் வைத்து அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், பொலிஸாரின் அறிவுரையின் பேரில் தாம் அவ்வப்போது தங்குமிடங்களை மாற்றி தலைமறைவாக இருந்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.