கல்முனை மாநகர சபையில் பரபரப்பு!!



 கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை ஊழியர் ஒருவர் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாத ஊழியர் ஒருவரிடம் விளக்கம் கோரிய சந்தர்ப்பத்தில் இந்தச் சம்பவம் நேற்று (09) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை ஆராயும் நோக்கில், பதில் ஆணையாளர் நூர்தீன் முகம்மட் நௌபீஸ் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, கடமைக்கு சமூகமளித்திருந்த போதிலும், ஊழியர் ஒருவர் தனது பொறுப்புகளை முறையாக மேற்கொள்ளவில்லை என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த ஊழியரிடம் பதில் ஆணையாளர் விளக்கம் கோரிய நிலையில், அவர் தகாத முறையில் நடந்துகொண்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகர சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் தொடர்பான முறைப்பாட்டைத் தொடர்ந்து, கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.