பாகிஸ்தான் விமான சேவையில் அவசர நிலை!!



 பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஷார்ஜா நகரிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பயணித்த Boeing 737 ரக சரக்கு விமானம், அதன் வழிகாட்டும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு தொடர்பில் அறிவித்த பின்னர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாக பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது, விமானத்தில் ஐந்து பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமானக் கண்காணிப்பு சேவையான Flightradar24 வெளியிட்ட ஆரம்ப தரவுகளின்படி, சுமார் 27 ஆண்டுகள் பழமையான குறித்த விமானம் கராச்சியின் தென்மேற்கு கடல் பகுதியை அண்மித்த போது அதன் உயரத்தில் பல முறை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் வேகமாக கீழ்நோக்கி இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள போதிலும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், காணாமல் போன விமானத்தை கண்டறியும் நோக்கில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் தற்போதைய நிலை மற்றும் அதில் பயணித்த பணியாளர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.