கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் பெறுபேறு மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்திருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட இணையவழி முறையைத் தவிர வேறு வழிகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் "Our Services" பகுதியின் கீழ் உள்ள "Exam Information Centre" ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். புதிய பயனர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி புதிய கணக்கொன்றை உருவாக்க வேண்டும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள் மற்றும் பொதுவான வழிகாட்டல்களை கவனமாக வாசிப்பதுடன், வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் காணொளியை பார்வையிடுவது அவசியம் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு பாடத்திற்கான மறுபரிசீலனைக் கட்டணம் 200 ரூபாவாகும். குறித்த கட்டணத்தை கடன் அட்டை, வரவு அட்டை அல்லது தபாலகங்கள் ஊடாக செலுத்த முடியும்.
கட்டணம் செலுத்திய பின்னர் விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், விண்ணப்பம் தொடர்பான குறுஞ்செய்தி அறிவித்தல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழியில் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், கட்டணம் செலுத்திய பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் பணம் மீள வழங்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 0112 785 231 உள்ளிட்ட உத்தியோகபூர்வ இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
