மொரோக்கோவின் கனவை முடிவுக்குக் கொண்டுவந்த பிரான்ஸ்!!

 


2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் கால்இறுதிப் போட்டியில், மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

2022 உலகக் கிண்ண அரையிறுதியில் மொரோக்கோவை வீழ்த்தியிருந்த பிரான்ஸ், இந்த முறையும் அதே அணியை தோற்கடித்து மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கோல் எதுவும் பதிவாகவில்லை. எனினும், இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் வேகம் மாறியது.

60-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே கோல் அடித்து பிரான்ஸ் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 66-வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பேலே மேலும் ஒரு கோலைப் பதிவு செய்து பிரான்சின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

பின்னர் கோல் அடிக்க மொரோக்கோ அணி தீவிரமாக முயன்ற போதிலும், பிரான்ஸ் அணியின் உறுதியான தடுப்பாட்டத்தை உடைக்க முடியவில்லை. இதனால் போட்டி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அடித்த கோலின் மூலம், உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் (12) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.

அத்துடன், நடப்பு உலகக் கிண்ண தொடரில் 8 கோல்களுடன் லியோனல் மெஸ்ஸியுடன் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து வருகிறார்.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், மொரோக்கோ அணியின் உலகக் கிண்ணப் பயணம் கால்இறுதிச் சுற்றுடன் நிறைவடைந்துள்ளது.