ஒரே நாளில் நான்கு விபத்துகள்; நால்வர் உயிரிழப்பு.

 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வெவ்வேறு வீதி விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துகள் நேற்று (07) தலாவ, கரந்தெனிய, புளியங்குளம் மற்றும் ஆனமடுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் – தலாவ பிரதான வீதியின் சுனாமி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் ரக வாகனமொன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஹிதோகம பகுதியைச் சேர்ந்தவரும், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் சாரதியாக கடமையாற்றியவருமாவார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கரந்தெனிய மடக்கும்புர கொடவெல குறுக்கு வீதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மடக்கும்புர நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முன்னால் பயணித்த மிதிவண்டியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மிதிவண்டி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

மேலும், ஏ-09 வீதியின் ராமநூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 48 வயதுடைய பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் வாகனம் வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதுடன், தூக்கி வீசப்பட்ட அவர் எதிரே வந்த கார் ஒன்றில் சிக்கி காயமடைந்துள்ளார். பின்னர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஆடிகம – கீரியன்கள்ளிய வீதியின் 12ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞர், மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். காயமடைந்த அவர் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.