அயதுல்லா அலி கமேனியின் உடல் மஷ்ஹத் இமாம் ரெஸா தர்காவில் அடக்கம்.




 ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், ஈரானிய ஷியா முஸ்லிம்களின் மிக முக்கியமான புனித தலங்களில் ஒன்றான மஷ்ஹத் நகரில் அமைந்துள்ள இமாம் ரெஸா தர்காவில் அடக்கம் செய்யப்பட்
டுள்ளது.

ஈரான் மற்றும் அண்டை நாடான ஈராக்கின் பல்வேறு நகரங்களில் ஆறு நாட்களாக நடைபெற்ற பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி மத வழிபாடுகளைத் தொடர்ந்து இந்த உடல் அடக்கம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறுதிச்சடங்கு நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலைமை, கமேனியின் மரணத்திற்கு வழிவகுத்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஆரம்பகட்ட உடன்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில், தெஹ்ரான் மற்றும் மஷ்ஹத் நகரங்களை இணைக்கும் ரயில் பாதையின் இரண்டு பாலங்கள் மீது அமெரிக்கா இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தெஹ்ரானில் உள்ள அயதுல்லா அலி கமேனியின் இல்லம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அவரைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தாபா கமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த தாக்குதலில் அவர் காயமடைந்ததாக வெளியான தகவல்களுக்கு பின்னர் அவர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என கூறப்படுகிறது.

தெஹ்ரான் மற்றும் கோம் நகரங்களில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் மொஜ்தாபா கமேனி கலந்துகொள்ளவில்லை என்பதுடன், மஷ்ஹத்தில் நடைபெற்ற உடல் அடக்க நிகழ்விலும் அவர் பங்கேற்றாரா என்பது தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும், ஈராக்கிலிருந்து இன்று காலை மஷ்ஹத் நகருக்கு வந்த விசேட விமானம் மூலம் அயதுல்லா அலி கமேனி, அவரது பேத்தி, மருமகன், மகள் மற்றும் மொஜ்தாபா கமேனியின் மனைவி ஆகியோரின் உடல்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.