பல பகுதிகளில் இன்று மழை; பலத்த காற்றுக்கும் எச்சரிக்கை.

 


நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று நிலவும் பகுதிகளில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.