பல பகுதிகளில் மழை தொடரும்: பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.



 நாட்டின் பல பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.