சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஓமான் கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்க இராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல்கள் தற்காப்பு நோக்கத்திற்காக நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், இந்த நடவடிக்கை ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகவும், அதேவேளை தற்போதைய போர் நிறுத்த மற்றும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு இது தடையாக அமையாது என அமெரிக்கா நம்புவதாகவும் கூறியுள்ளார்.
முதற்கட்ட தாக்குதல்களில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நிலைமையைப் பொறுத்து கூடுதல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை ஈரானின் ஷாஹெட் (Shahed) ட்ரோன் மூலம் அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. எனினும், அது திட்டமிட்ட தாக்குதலா அல்லது தற்செயலாக இடம்பெற்ற சம்பவமா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
அந்த ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு விமானிகளும் காயமின்றி தப்பியதுடன், அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் படகின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
.jpeg)