வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வருடாந்த கட்டண திருத்தக் கொள்கைக்கு அமைவாக, இந்த ஆண்டு பேருந்து கட்டணங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு (NTC) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், இதுவரை தொடர்புடைய பேருந்து சங்கங்களுடன் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், எதிர்பார்க்கப்படும் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கையை நாட வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ‘அத தெரண’ தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வினவியபோது, வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்துக்கான முன்மொழிவு ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் புதிய பேருந்து கட்டண திருத்தம் அமல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
