உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar Association of Sri Lanka) தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி இந்த பொதுமக்கள் கருத்தறியும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அண்மையில் கூடிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு, முன்மொழியப்பட்ட ஓய்வுபெறும் வயது நீட்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்கவும் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, இந்த விவகாரம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சட்டத்தரணிகள் சபை கூட்டத்துக்குப் பிறகு பொதுமக்கள் கருத்து சேகரிப்பு வேலைத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், நீதிச் சேவைச் சங்கமும் (Judicial Service Association) இந்த முன்மொழிவு தொடர்பாக விசேட பொதுசபைக் கூட்டத்தை கூட்ட தீர்மானித்துள்ளது. அந்த கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
