அமெரிக்காவில் அதிர்ச்சி: UFO வீடியோக்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் வெளியீடு.

 


விண்ணில் பறக்கும் அடையாளம் தெரியாத பொருட்கள் (UFO) மற்றும் வேற்றுக்கிரக வாழ்வு குறித்த மர்மங்கள் பல தசாப்தங்களாக உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை (Pentagon) யுஎஃப்ஓ தொடர்பான ரகசிய வரலாற்று ஆவணங்களின் இரண்டாம் கட்டத்தை சமீபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் ஆகியோரின் உத்தரவின் பேரில், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த தொகுப்பில் மொத்தம் 222 கோப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் இராணுவ விமானிகள் மற்றும் உளவுத்துறை ரேடார்கள் பதிவு செய்த இதுவரை வெளியிடப்படாத 51 வீடியோக்களும் உள்ளன.

மேலும், விண்வெளி வீரர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் ஆடியோ பதிவுகளும் இந்த தொகுப்பில் அடங்கும். நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டியா இராணுவத் தளத்திற்கு அருகில் 1948 முதல் 1950 வரை நிகழ்ந்ததாக கூறப்படும் 209 மர்ம சம்பவங்கள் குறித்த 116 பக்க வரலாற்று ஆவணமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் வானில் பச்சை நிற ஒளிக்கோளங்கள், வட்டு வடிவப் பொருட்கள் மற்றும் நெருப்பு போன்ற ஒளி நிகழ்வுகள் காணப்பட்டதாக இராணுவ வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு உயர் அதிகாரியின் வாக்குமூலத்தில், 2025 ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் அருகே ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற ஒளிக்கோளங்கள் தோன்றி, போர் விமானங்களை முக்கோண வடிவில் சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ 12 விண்வெளி பயணத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விசித்திரமான ஒளிக்கீற்றுகள் குறித்த ஆடியோ பதிவுகளும் வெளியாகியுள்ளன. அதேபோல், ஏரி ஹூரான் பகுதியில் ஒரு அடையாளம் தெரியாத பொருள் அமெரிக்க விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் வீடியோவும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்பு மே மாதம் 8 ஆம் தேதி முதல் கட்டமாக 161 ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த இணையதளம் தொடங்கிய சில நாட்களிலேயே உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் All-Domain Anomaly Resolution Office (AARO) மற்றும் அறிவியல் நிபுணர்கள் இந்த ஆவணங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவை பெரும்பாலும் அடையாளம் தெரியாத வானியல் நிகழ்வுகள் (UAP) மட்டுமே எனவும், அவை வேற்றுகிரகவாசிகளின் விண்கலங்கள் என்பதற்கான உறுதியான அறிவியல் ஆதாரம் இதுவரை இல்லை எனவும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.