கட்டுநாயக்க–மாகும்புர சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்.

 


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் செயல்திறன் மிக்க போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை இணைந்து இந்த சேவையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த சேவையின் மூலம், பயணிகள் மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும், அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் விரைவான மற்றும் வசதியான போக்குவரத்து வசதியைப் பெற முடியும்.

பேருந்து சேவைக்கான பயணக் கட்டணம் ரூ.410 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 நிமிடங்களில் பயணத்தை நிறைவு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 5.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை, ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த சொகுசு பேருந்து சேவை இயக்கப்படும்.

சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பயணிகளின் வசதி மற்றும் சேவையின் தரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், விமான நிலைய பயணிகள் மிகவும் நம்பகமான, விரைவான மற்றும் வசதியான போக்குவரத்து சேவையைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், விமான நிலையத்திற்கும் முக்கிய போக்குவரத்து மையங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்துவதன் மூலம், சுற்றுலா துறை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.