இந்த அபாரமான எறிதலின் மூலம், ஆசிய தடகள வரலாற்றில் இரண்டாவது சிறந்த ஈட்டி எறிதல் சாதனையைப் பதிவு செய்த வீரராக அவர் உயர்ந்ததுடன், உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களின் பட்டியலில் 8ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
மேலும், 2026 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான சிறந்த ஈட்டி எறிதல் பரிதியாக இது அமைந்துள்ளதுடன், இந்த ஆண்டில் 90 மீற்றர் எல்லையைத் தாண்டிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையையும் ருமேஷ் பெற்றுள்ளார்.
இலங்கை தடகள வரலாற்றில் 90 மீற்றர் எல்லையைத் தாண்டி ஈட்டி எறிந்த முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
ரோம் டயமண்ட் லீக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ருமேஷின் 92.62 மீற்றர் எறிதல், ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரரான Arshad Nadeem பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் படைத்த ஆசிய சாதனையை விட வெறும் 35 சென்டிமீற்றர் மட்டுமே குறைவாக இருந்தது.
23 வயதான ருமேஷின் முந்தைய சிறந்த சாதனை 89.37 மீற்றராக இருந்த நிலையில், ரோம் போட்டியில் தனது இரண்டாவது முயற்சியிலேயே இந்த இமாலய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், ஈட்டி எறிதலில் 90 மீற்றர் எல்லையைத் தாண்டிய நான்காவது ஆசிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அத்துடன், 2006 ஆம் ஆண்டு நோர்வே வீரர் Andreas Thorkildsen படைத்திருந்த 90.34 மீற்றர் போட்டி சாதனையையும் 2.28 மீற்றர் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார்.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் உலகின் சிறந்த இரண்டு எறிதல்களும் ருமேஷ் பத்திரகேவின் பெயரிலேயே பதிவாகியுள்ளதுடன், இது புதிய இலங்கை தேசிய சாதனையாகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
