சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நான்கு முன்னணி தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் தாங்கள் பணியாற்றிய தனியார் வங்கி வளாகங்களிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இவ்வாறானதொரு சம்பவம் தொடர்பில் வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் தடவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில், குறித்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், நான்கு வங்கி அதிகாரிகளுக்கும் வாராந்தம் பணம் வழங்கி வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி, குறித்த அதிகாரிகளுக்கு வாராந்தம் 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் என வெவ்வேறு தொகைகளில் பணம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட முகாமையாளர்களில் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.