பல பகுதிகளுக்கு இன்று கனமழை எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.



 நாட்டின் பல பகுதிகளில் இன்று (05) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளிலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் வாய்ப்பு காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கம் மற்றும் திடீர் காற்றழுத்த மாற்றங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.