இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதலில் புதிய திருப்பம்: தாக்குதல்களை நிறுத்த ஒப்புதல்.

 


அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சியின் கீழ், இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த ஹிஸ்புல்லா அமைப்பு இணங்கியுள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலாக, லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல்களை மேற்கொள்ளாதிருக்க இஸ்ரேலும் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லெபனான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல்களை பரஸ்பரம் நிறுத்தும் அமெரிக்க முன்மொழிவை ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த உடன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், ஹிஸ்புல்லா தனது நகரங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்தால், பெய்ரூட் மீதான தாக்குதல்களும் தொடரும் என அவர் எச்சரித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்போதைய போர்நிறுத்த முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இருதரப்பினரும் தாக்குதல்களை குறைக்க இணங்கியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால், தெற்கு லெபனானில் திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேவேளை, ட்ரம்ப் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட பின்னரும் சில மோதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு இஸ்ரேலின் சில பகுதிகளை இலக்காகக் கொண்டு ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள நிலையில், பிராந்தியத்தில் பதற்றம் முழுமையாக தணியாத சூழல் தொடர்கிறது.

மேலும், லெபனானில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் மறைமுக பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று மாதங்களாக நீடித்து வரும் மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் மற்றும் LNG விநியோகச் சங்கிலிகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக எரிசக்தி சந்தைகளில் விலைகள் உயர்ந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்து வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தாலும், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ மற்றும் நிரந்தர ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.