மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இலங்கையில் பணவீக்கம் மீண்டும் உயரும் சாத்தியம்.



 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழலும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வும் காரணமாக இலங்கையின் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் குறுகிய காலத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், அது நீண்டகாலமாக தொடர்வதால் இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (01) இரவு ஒளிபரப்பான '360' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது 5.4% முதல் 5.5% வரையிலுள்ள பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் நுகர்வு குறையாத நிலை காரணமாக மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் கூறினார். இதனால் பணவீக்கம் 7% வரை உயர வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார்.

இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காகவே கடந்த வாரம் மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையை இறுக்கமாக்கியுள்ளதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் உள்நாட்டு தேவையை ஓரளவு கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தை குறைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், சட்டபூர்வமான வழிகளில் சம்பாதிக்கப்பட்ட எந்தவொரு பணத்தையும் இலங்கைக்கோ அல்லது இலங்கை வங்கிகளுக்கோ அனுப்புவதற்கு எந்தவித தடையும் இல்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

பணமோசடி தடுப்பு சட்டங்களின் கீழ் சட்டபூர்வமான வருமானங்களை வங்கிகள் ஊடாக நாட்டிற்கு அனுப்ப முடியும் என்றும், சட்டவிரோதமான பணப் பரிமாற்றங்களுக்கே கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.