விஜய்–சங்கீதா விவாகரத்து வழக்கு: மீண்டும் ஆகஸ்ட் 7க்கு ஒத்திவைப்பு

 


1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவரம் பிப்ரவரி மாதம் பொதுவெளியில் தெரியவந்தது.

முன்னதாக நடைபெற்ற விசாரணைகளில் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அன்றும் இரு தரப்பினரும் ஆஜராகவில்லை.

பின்னர், இரு தரப்பினரும் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பிரபலத்தன்மையை கருத்தில் கொண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் வழக்கை நீதிபதி ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். மேலும், இரு தரப்பினரின் மின்னஞ்சல் முகவரிகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த வழக்கு முதலில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதால், பின்னர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. குடும்ப நல நீதிமன்றத்திலும் தேவையான மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.